வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி இணைய வழியாக புதுச்சேரியை சேர்ந்த பட்டாதாரி பெண் உட்பட பலரிடம் ரூ.45 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த பெண்னை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டாதாரி பெண் பிரியதர்சினி (28). இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வந்த இணையதள விளம்பரத்தை பார்த்து கோவையை சேர்ந்த சிலரிடம் ரூ.3.5 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளதாக புதுச்சேரி டி.ஜி.பி மனோஜ்குமார் லாலிடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு டி.ஜி.பி உத்தரவிட்டார், இதனைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார், புதுச்சேரி பட்டாதாரி பெண்ணிடம் மோசடியில் ஈடுப்பட்டது கோவையை சேர்ந்த தாய் - மகன் என தெரியவந்தது. இதையடுத்து கோவையில் முகாமிட்ட போலீசார் நாகம்மை (58) என்பவரை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது நாகம்மையும் அவரது மகன் பிரபாகரனும் போலி பாஸ்போர்ட்கள், போலி முத்திரைகள், அரசாங்க ஆவணங்களை வைத்து கொண்டு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி இதுவரை புதுச்சேரியில் 10 பேரிடம் 45 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மோசடி செய்தது தெரியவந்தது, இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நாகம்மையை நீதிபதி இல்லத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார், அவரை காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து இந்த வழக்கில் நாகம்மையின் மகன் பொறியாளர் பிரபாகரனை (40) போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிப்பட்ட பிறகே சென்னை மற்றும் திருச்சியில் யார் யாரை ஏமாற்றியுள்ளார்கள் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.