குற்றம்

காவல்துறையை கண்டு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை: டிஜிபி சைலேந்திர பாபு

Veeramani

காவல்துறையை கண்டு குற்றவாளிகள்தான் அஞ்ச வேண்டும் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

திருச்சி தூய வளனார் கல்லூரியில்  தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு தலைமையில்(லாக்கப் டெத்) காவல் நிலைய மரணங்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில்  மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்கள் மற்றும் திருச்சி மாநகரிலுள்ள  காவல் உயர் அதிகாரிகள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.



காவல்நிலைய மரணங்கள் தடுப்பது குறித்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், துணை இயக்குனர், வழக்கறிஞர் ,அறிவுரை ஆலோசனை வழங்க உள்ளனர் .300க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் இக்கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை தலைமை இயக்குனர், "தமிழ்நாட்டில் காவல்நிலைய மரணங்கள்  84 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. அகில இந்திய அளவில் 909 மரணங்களும் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது. காவல்துறை வன்முறையை கையாளக் கூடாது என ஏற்கனவே முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஆகையால் தற்போது இந்த பயிற்சி முகாம் காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. காவல் நிலையத்தில் எல்லா மரணங்களும் நிகழ்ந்ததாக குறிப்பிட முடியாது .சிலர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு மரணமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு கொடுக்கத்தான் காவல்துறை உள்ளது. பொதுமக்கள் காவல்துறையை தாக்கும்போது அப்போது தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது, அந்த நேரத்தில் எப்படி கையாள்வது என்பது குறித்து அவர்களுக்கு கராத்தே வர்ம கலைகள் கற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது. காவல் நிலைய சிறையில் இருக்கும் கைதிகள் இனி மரணம் அடையக் கூடாது என்பதற்காக இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறுகிறது. தேவை ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினர் பலத்தை பயன்படுத்தலாம், குற்றவாளிகள் காவல்துறையினரை பார்த்து பயப்பட வேண்டும். நல்லவர்கள் காவல்துறையினரை கண்டு அச்சப்பட தேவையில்லை" என தெரிவித்தார்  



மேலும், "ஒரு லட்சத்து 13 ஆயிரம் காலர்களுக்கு இது போன்ற மனநலம் குறித்த பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் மன இறுக்கத்தைப் போக்குவதற்கு ஒரு நாள் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. ஆபத்து வரும் பொழுது காவலர்கள் திறமையாக செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே கள்ளச்சாராயம் இருக்கிறது. அதனை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல்துறையில் புதிதாக 10,000 காவலர்கள் பணியில் சேர இருக்கிறார்கள் அவர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். குற்றங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குகள் பதியப்படும்" என தமிழக டிஜிபி தெரிவித்தார்.