விருதுநகரில் நிகழ்ந்த 22 வயது பெண் 8 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் வரும் 24ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அறிவித்துள்ளார்.
விருதுநகரில் வசித்து வரும் ஹரிஹரன் என்பவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய 22 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்துள்ளனர். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி ஹரிஹரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை தனது செல்போனில் வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து, ஹரிஹரனின் நண்பர்களான திமுக நிர்வாகி ஜூனத் அகமது, பிரவீன் மற்றும் 9-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 4 பேர் அந்த இளம்பெண்ணிடம் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண், இதுகுறித்து மாடசாமி என்பவரிடம் கூறியுள்ளார். அவர் அந்த வீடியோவை அவரது செல்போனுக்கு அனுப்பச் சொல்லி, அவரும் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீஸார் பள்ளி மாணவர்கள் 4 பேர் மற்றும் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது ஆகியோரை நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் இதுகுறித்து வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன். இந்த வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக இருந்தது ஒரு உள்ளூர் திமுக பிரமுகர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் சிறுமிகள், பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை தினமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, இந்த சம்பவத்தைக் கண்டித்து விருதுநகரிலே 24ஆம் தேதி காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாநில அரசு அரசியல் காரணங்களுக்காக காவல்துறையை செயல்பட விடாமல் இருப்பதை கண்டித்து போராட்டம் நடைபெறும்” என்று பதிவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள திமுக பிரமுகர் ஜூனத் அகமது என்பவரை கட்சியில் இருந்து தற்காலிகனாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முன்னதாக குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தருமாறு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது