குற்றம்

2 ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் - தனியார் ஐடி ஊழியரை படுகொலை செய்த ஒப்பந்த ஊழியர்

webteam

சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே இந்த படுகொலை சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சென்னை வியாசர்பாடி கன்னிகா புரத்தை சேர்ந்தவர் விக்கி என்ற விவேக். தற்போது அயனாவரத்தில் தனது மனைவி தேவப்பிரியா மற்றும் ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். விவேக் சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே உள்ள எழும்பூர் நெடுஞ்சாலையில் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவரது மனைவி தேவப்பிரியா சென்னை எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்று காலை தேவப்பிரியாவை அவரது அலுவலகத்தில் விட்டுவிட்டு எழும்பூர் நெடுஞ்சாலை அருகே உள்ள அவரது நிறுவனத்திற்கு வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளார்.

விவேக்கிற்கும் அதே நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்துவந்த சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷிற்கும் வேலை விஷயத்தில் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் சந்தோஷ் அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஏற்கனவே விவேக்கிற்கும் சந்தோஷிற்கும் பிரச்னை இருந்ததால் மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. சந்தோஷை விவேக் அதிக வேலை வாங்கி வந்துள்ளார். கோபமடைந்த சந்தோஷ் விவேக்கை பழி தீர்க்க தக்க சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை அலுவலகத்திற்கு வந்த விவேக்கை சந்தோஷ் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி வெட்டியுள்ளார். இதனை தடுத்த விவேக்கின் சக ஊழியரான அருணையும் சந்தோஷ் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே விவேக் உயிரிழந்தார். அருண் சிகிச்சைக்காக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து சந்தோஷ் மாடியில் ஏறி கட்டடம் விட்டு கட்டடம் ஏறி தாவிக்குதித்து தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விவேக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் படுகொலை நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட போது அருகில் இருந்த கட்டடத்தில் சந்தோஷ் மறைந்திருந்ததை கண்டுபிடித்தார். உடனடியாக காவலர்களை அனுப்பி சந்தோஷை கைது செய்தனர். படுகொலை செய்யப்பட்ட விவேக், ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் எல்எல்பி சட்டப் படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஏற்கனவே சந்தோஷிற்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பீக் ஹவர் நேரத்தில் எழும்பூர் நெடுஞ்சாலையில் ஏராளமான நிறுவனங்கள் இயங்கி வருகிறது. காலை நேரத்தில் அதிகமான மக்கள் மற்றும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்போதே இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் இந்த இடத்திற்கும் எழும்பூர் காவல் நிலையத்திற்கும் 100 மீட்டர் இடைவெளியே உள்ள நிலையில் இதுபோன்ற படுகொலை சம்பவம் பட்டப்பகலில் நடைபெற்றது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.