நெல்லையில் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட கைதி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய சிங்காரம் என்ற கைதியை, பாளையங்கோட்டை சிறையிலிருந்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லும் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலத்த காயம் அடைந்த சிங்காரம் பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிங்காரம் போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டபோது இருசக்கர வாகனத்தில் வந்த 10க்கும் மேற்பட்டோர் காவல்துறை வாகனத்தை தடுத்து நிறுத்தி காவலர்களின் கண்களில் மிளகாய் பொடி கலந்த நீரை தெளித்தனர். காவலர்கள் தடுமாறிய நிலையில் சிங்காரத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். கொலையாளிகள் யார், தாக்குதலின் பின்னணி என்ன என்பது குறித்து தனிப்படை அமைத்து நெல்லை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.