டெல்லி அருகே பள்ளி ஒன்றில் தேர்வைத் தள்ளி வைப்பதற்காக, அந்தப் பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவன் 7 வயது சிறுவனை கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி அருகே குர்கானில், கடந்த செப்டம்பர் மாதம் பள்ளியில் வைத்து 7 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதே பள்ளியின் 11 ஆம் வகுப்பு மாணவனை பிடித்து சிபிஐ விசாரித்த போது அவன் சொன்ன கராணம் அதிர வைத்துள்ளது. படிப்பில் மிகவும் பின்தங்கிய அந்த மாணவன், தேர்வை தள்ளிவைக்கவும், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தை ஒத்திவைக்கவும் ஒரு கொலையை செய்ய திட்டமிட்டதாக கூறியுள்ளான். அந்த நேரத்தில் பிரத்யூமன் எனும் 7 வயது கழிவறைக்கு வந்ததால் அவனை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக பிடிபட்ட மாணவன் கூறியிருக்கிறான். அவன் மீது சிறார் குற்றப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
டெல்லி அருகே குர்கானில் உள்ள ரியான்ஸ் சர்வதேசப் பள்ளியில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி இந்தக் கொலை நடந்தது. பள்ளியின் கழிவறையில் 2 ஆம் வகுப்பு மாணவன் பிரத்யூமன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தான். இந்த கொலை தொடர்பாக, 14 சிறப்பு அதிரடிப் படைகள் அமைத்து விசாரித்த குர்கான் போலீசார், பள்ளி வாகன ஓட்டுநர் அசோக் குமார் என்பவரை கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ போலீசார். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட அசோக் குமாருக்கு எதிராக எந்த ஆதாரங்களும் கிடைக்காத நிலையில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து, கழிவறைக்கு சென்று வந்த அனைவரிடமும் விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் இந்த 11 ஆம் வகுப்பு மாணவன் சிபிஐ போலீசாரிடம் சிக்கியுள்ளான்.