திருப்புவனம் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்த விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ளது இலந்தைகுளம் கிராமம். இங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடந்துள்ளன. இந்நிலையில், இதே கிராமத்தைச் சேர்ந்த சிவானந்தம், விளையாட்டுப் போட்டிகள் குறித்து ஒலிபெருக்கியில் பேசியுள்ளார்.
அப்போது இந்த கிராமத்தைச் சேர்ந்த, கார்த்திகேயன், கருப்புசாமி, அருண்குமார் ஆகிய மூன்று பேரும் ஒலிபெருக்கியில் பேசக்கூடாது என்று கூறியுள்ளார்கள். இதனால் சிவனாந்தம் தரப்பினருக்கும் கார்த்தி தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவானந்தம் தரப்பினர், கருப்புசாமி மற்றும் அருண் குமார் ஆகியோர் வீட்டிற்குச் செல்லும்போது அவர்களை வழிமறித்து கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் கருப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருண்குமார் பலத்த காயத்துடன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இலந்தைகுளத்தை சேர்ந்த சிவா, சிவானந்தம், கண்ணன், ராஜ்குமார், சரத்குமார் ,ஆகிய 5 பேரை கைது செய்த திருப்புவனம் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.