இளைஞர் காவல் நிலையத்தில் சரண் pt desk
குற்றம்

பொள்ளாச்சி | திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவி குத்திக் கொலை - இளைஞர் காவல் நிலையத்தில் சரண்!

பொள்ளாச்சி அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காதலன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

PT WEB

செய்தியாளர்: ரா.சிவபிரசாத்

பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்முத்து நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் கண்ணன். இவரது 19 வயது மகள் அஸ்விதா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை கண்ணனும் அவரது மனைவியும் வேலைக்குச் சென்று விட்டனர். இதையடுத்து இன்று மதியம் கண்ணன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, மாணவி அஸ்விதா கத்திக் குத்து காயங்களுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அஸ்விதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

Arrested

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்க வந்த பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், தனியாக வீட்டில் இருந்த மாணவியை மர்ம நபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதற்கிடையே உடுமலை சாலையில் உள்ள அண்ணாமலையார் நகரைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் பிரவீன் குமார் என்ற இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அஸ்விதா, பிரவீன் குமார் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அஸ்விதா பிரவீன் குமாரை திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த பிரவீன், வீட்டில் தனியாக இருந்த அஸ்விதாவை குத்திக் கொலை செய்தது தெரியவந்துள்ளது இதையடுத்து சம்பவ இடத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.