குற்றம்

ஃபேஸ்புக் மூலம் பழகி இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை - தேடப்பட்டவர் கைது

ஃபேஸ்புக் மூலம் பழகி இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை - தேடப்பட்டவர் கைது

webteam

பொள்ளாச்சியில் பெண்களை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சியில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டது. கனிவோடு பழகிய திருநாவுக்கரசு மீது நன்மதிப்பு ஏற்பட்டதால், அந்த பெண் அவரோடு நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறிய திருநாவுக்கரசு, அந்த பெண்ணை கடந்த மாதம் 12-ஆம் தேதி காரில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. ஊஞ்சபேலம்பட்டி என்ற இடத்தில் காரில் ஏறிக் கொண்ட நண்பர்கள், அந்த பெண்‌ணை தங்களின் செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து அதைவைத்து அப்பெண்ணிடம் இருந்த நகையை மிரட்டி வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போனில் 40 க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு தலைமறைவானார்.

இதனிடையே பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக திருநாவுக்கரசு மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. 

இதையடுத்து இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் திருநாவுக்கரசை தேடி வந்தனர். அப்போது தலைமறைவான திருநாவுக்கரசு திருப்பதி பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பின்தொடர்ந்த போலீசார் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசுவை பொள்ளாச்சியை அடுத்த மாகினாம்பட்டி பகுதியில் கைது செய்தனர். 

இதனிடையே தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு எனக்கும் இந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வீடியோ பதிவு செய்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.