பேருந்திலிருந்தபடி எச்சில் துப்பிய நடத்துநருடன் ஒருவருக்கு ஏற்பட்ட தகராறு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த பேருந்து நடத்துனரை தாக்கிய காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மேலும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ஜான் லூயிஸ். இவர், இன்று காலை பணி முடிந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் எதிரேயுள்ள பூக்காரன் தெரு பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது அவ்வழியாகச் நடந்து சென்ற மாநகரப் போக்குவரத்து கழக நடத்துநர் பாலசந்திரன் என்பவர் கீழே எச்சில் துப்பியபோது, அது தன் மீது பட்டதாகக் கூறி காவலர் ஜான் லூயிஸ் என்பவர், நடத்துடனர் பாலச்சந்திருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாசமாக பேசியுள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது.
இதில் காவலர் ஜான் லூயிஸ் நடத்துனர் பாலசந்திரனை தாக்கியதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அங்கு கூடிய மக்களும் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற சைதாப்பேட்டை போலீசார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காவலர் ஜான் லூயிஸ் மாநகர போக்குவரத்துக் கழக நடத்துனரான பாலசந்திரனை தாக்கியதால் ரத்தக் காயத்துடன் அவர் நிற்பது போலவும், அவர்களுக்குள் வாக்குவாதம் நடப்பது போலவும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்கள் பரவி வருகிறது.
இதையும் படிங்க... பள்ளி மாணவன் வெட்டிப் படுகொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலைமறியல்
இந்த சம்பவம் தொடர்பாக காவலர் ஜான் லூயிஸ், பேருந்து நடத்துனர் பாலச்சந்திரன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் காவலர் ஜான் லூயிஸ் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்தாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. அது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை பெருநகர காவல், அடையாறு காவல் மாவட்டம் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஜான் லூயிஸ் என்ற காவலர் பணிபுரிந்து வருகிறார். ஜான் லூயிஸ் நேற்று (14.05.2022) இரவு 21.00 மணி முதல் காலை 07.00 மணி வரை நியமிக்கப்பட்டவர்.
ரோந்து அலுவலின் போது அலுவலாக காலை 07.00 மணியளவில் மெட்ரோ ஓட்டல் அருகில் உள்ள பூக்கார தெரு பக்கம் வரும் போது அங்கு நின்று கொண்டிருந்த சைதாப்பேட்டை பாலச்சந்திரன் என்பவர் ரோட்டில் எச்சில் துப்பியதாகவும் அப்போது அங்கு வந்த காவலர் ஜான் லூயிஸ் ஏன் பொது இடத்தில் எச்சில் துப்புகிறீர்கள் என கேட்டு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி கேட்டிருக்கிறார். வாக்குவாதம் ஏற்பட்டதில் பாலச்சந்திரனை மேற்படி காவலர் ஜான் லூயிஸ் கையால் முகத்தில் தாக்கியுள்ளார்.
தாக்கப்பட்டதில் அவரது வலது கண்ணின் கீழ் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம்பட்ட பாலச்சந்திரனை அங்கு வந்த மற்ற காவலர்கள் அழைத்து சென்று சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஜெயச்சந்திரன் கொடுத்த புகார் பெறப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் காவலர் ஜான் லூயிஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.