குற்றம்

சப்-இன்ஸ்பெக்டரின் கையை முறித்த குடிகாரக் கும்பல்

Rasus

திருப்பூரில் ரோந்து சென்ற உதவி காவல் ஆய்வாளரை குடிபோதையில் இருந்த நபர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கை முறிந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக இருப்பவர் அண்ணாதுரை. இவர் வழக்கம்போல இன்று காலை செல்லம் நகர் பகுதிகளில் ரோந்து மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த டாஸ்மாக் கடை அருகே காலை வேளையில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த குடிமகன்களை அவரவர் வீட்டிற்கு செல்ல அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளார். இதனால் அங்கிருந்த மது பிரியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் அழைத்துச்செல்ல முயற்சித்தபோது உதவி காவல் ஆய்வாளரை கீழே தள்ளி விட்டு தாக்கியுள்ளனர். இதில் அண்ணாதுரைக்கு கை முறிவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . இதனையடுத்து திருப்பூர் மத்திய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, காவல் உதவி ஆய்வாளரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே திருப்பூரில் பல பகுதிகளில் முறைகேடாக மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுவரும் நிலையில் இன்று காலை மதுபோதையில் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.