குற்றம்

இது என்ன சூட்டிங்கா..! சினிமா பாணியில் சேற்றில் புரண்டு கடத்தல்காரர்களை பிடித்த போலீசார்!

webteam

குட்கா கடத்தல்காரர்களை போலீசார் சேற்றில் புரண்டு சினிமா பாணியில் துரத்தி பிடித்தனர். கடத்தல்காரர்கள் பிடித்தபோது சினிமா சூட்டிங் நடக்கிறது என்று பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தாவுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் இன்று காலை ரோந்து காவலர்கள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கர்நாடகாவிலிருந்து வந்த ஹூண்டாய் (Creta ) காரை சோதனை செய்தபோது, 40 மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருந்தன. காரில் வந்த மூன்று பேரை பிடித்தபோது அவர்கள் மூன்று பேரும் தப்பி, அங்கிருந்த வயல்வெளி பகுதியில் சேற்றில் இறங்கி ஓடினர்.

போலீசாரும் விடாமல் அவர்களை பின்தொடர்ந்து சேற்றில் இறங்கி மடக்கிப் பிடித்தனர். அப்போது போலீசாரும் குட்கா கொள்ளையர்களும் சேற்றில் புரண்டு ஓடியதை பார்த்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் இங்கு சினிமா சூட்டிங் நடக்கிறதோ அல்லது வேறு எனும் சண்டையோ என வேடிக்கை பார்த்தனர். அவர்களைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தபோது, அவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த கிஷோர்(29), சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த கைலாஷ்(19), செஞ்சி காந்தி நகரைச் சேர்ந்த சங்கரான ராம் (23) என்பதும், இவர்கள் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, திண்டிவனம், செஞ்சி பகுதிகளுக்கு குட்காவை கடத்தி செல்வதும் தெரியவந்தது.

திண்டிவனம், செஞ்சி போன்ற பல்வேறு கடைகளுக்கு இவர்கள் சப்ளை செய்ய எடுத்து வந்தார்களா? என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் மூவரையும் கைதுசெய்த போலீசார், 3 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் 25 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் பைக் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். குட்கா கொள்ளையர்களை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.