குற்றம்

சென்னையில் அடுத்தடுத்து 3 ATM களில் கொள்ளை முயற்சி - முகமூடிக்கார நபரை தேடும் போலீசார்

Sinekadhara

சென்னையில் நேற்றிரவு அடுத்தடுத்து 3 ATM களில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. பணப்பெட்டிகளை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது.

பொன்னியம்மன் சாலையில் உள்ள SBI வங்கி ATM மையத்தில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் புகுந்த மா்ம ஆசாமி ஒருவர் ATM பணப்பெட்டியை உடைக்க முயற்சித்துள்ளார். ஆனால் பணப்பெட்டியை உடைக்க முடியாததால் அங்கிருந்து வெளியேறியுள்ளார். அதையடுத்து அதே நபர் அதே சாலையில் உள்ள மற்றொரு SBI வங்கி ATM மையத்திற்குள் புகுந்து மெஷினை உடைக்க முயற்சி செய்தும் அங்கும் பணப்பெட்டியை உடைக்க முடியாததால் அங்கிருந்து. வெளியேறியுள்ளார். இருப்பினும், மூன்றாவதாக அதே சாலையில் உள்ள கனரா வங்கி ATM மையத்திற்குள் புகுந்து பணப்பெட்டியை உடைக்க முயன்றும் அங்கும் முடியாததால் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இந்தநிலையில், மும்பையில் உள்ள SBI யின் தலைமை கட்டுப்பாட்டு அறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகி எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்து சென்னை மாநகர காவல் ஆணையரகத்திற்கு அவசரமாக தகவல் கொடுத்துள்ளனா். உடனடியாக சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மடிப்பாக்கம் போலீசாருக்கு வாக்கிடாக்கி மூலம் தகவல் கொடுத்துள்ளனா்.

அதனைத் தொடர்ந்து மடிப்பாக்கம் இரவு ரோந்து போலீசாா் பொன்னியம்மன் கோயில் சாலைக்கு விரைந்து சென்றபோது கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது. மேலும் ஓரே இரவில் ஓரே சாலையில் அடுத்தடுத்து 3 ATMகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட போலீசார், காலையில் வங்கி அதிகாரிகளின் உதவியுடன் ATM மையங்களில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவானக் காட்சிகளை ஆய்வுசெய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை தேடிவருகின்றனர்.

இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசாரிடம் கேட்டபோது, முதல் ஏடிஎம்மில் நேற்றிரவு 1.30 மணிக்கு தொடங்கி, 3வது ஏடிஎம்மில் அதிகாலை 2.20 மணிக்கு முடித்துள்ளாா். 50 நிமிடங்களில் 3 ஏடிஎம்களில் கொள்ளை முயற்சி சம்பவங்களை நடத்தியுள்ளார். முகத்தை முகமூடியால் மறைத்துக்கொண்டிருந்த இந்த ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவருக்கு சுமாா் 30 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது.