தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா நோய் பரவலைத் தடுக்க கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையடுத்து 5 நபர்களுக்கு மேல், வெளியில் கூட தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசியத் தேவையை மீறி வெளியே வருபவர்களின் வாகனத்தில் மஞ்சள் சாயம் பூசுவது, வாகனத்தை சைட் லாக் பண்ணிவிட்டு எட்டுப் போடச் சொல்வது எனப் பல நூதன தண்டனைகள் வழங்கப்பட்டன. இந்தச் சோதனையின் போது லட்சக் கணக்கான இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்கும் பணிகள் நாள்தோறும் காலை 7 மணியிலிருந்து மதியம் 12. 30மணி வரை நடைபெறும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் 30 நிமிடங்கள் வரை கால அளவு நீட்டிக்கப்பட்டு ஒரு மணிவரை திருப்பி ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
30 நிமிடங்களில் 10 வாகனங்களைத் திருப்பி ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது. முதல் தகவல் அறிக்கை பறிமுதல் செய்யப்பட்ட வரிசை எண் அடிப்படையில் அந்தந்த காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. எந்த இடத்தில் வாகனத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக உரிமையாளர்களுக்குத் தகவல் அனுப்பப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாகன உரிமையாளர்கள் வாகனத்தின் ஆர்சி புத்தகம் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றின் அசல் மற்றும் நகலைக் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள காவல்துறையினர், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே வாகனங்கள் திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.