மாதவன் மற்றும் காவலர் கிருபாகரன்
மாதவன் மற்றும் காவலர் கிருபாகரன் புதியதலைமுறை
குற்றம்

“என்னைய ஒண்ணும் பண்ண முடியாது” - கொய்யா மரகிளையை வெட்டியதால் மண்வெட்டி எடுத்து தாக்கிய போலீஸ்காரர்!

யுவபுருஷ்

செய்தியாளர் - ராஜாராம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாதவன்(30). இவர் அதே மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வாகன விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையே, இவரது வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பக்கத்து வீட்டின் கொய்யா மரம் இவர் வீட்டின் மீது சாய்ந்துள்ளது.

இதனால், வீட்டின் மீது விழுந்த கொய்யா மரத்தின் கிளையை மட்டும் வெட்டி அகற்றிவிட்டு பெயிண்ட்டிங் வேலையை தொடங்கியுள்ளார் மாதவன். இதற்கிடையே, பக்கத்து வீட்டுக்காரர் தங்கியிருக்கும் காவலர் கிருபாகரன், மாதவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஆத்திரமடைந்த காவலர் கிருபாகரன், தனது வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து வந்து மாதவனை தாக்கியுள்ளார். அதனை தடுக்க வந்த மாதவனின் 60 வயதான தாயார் பானுமதியையும் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த மாதவனையும் அவரது தாயார் பானுமதியையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் செம்பனார் கோவில் போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாதவன் மற்றும் பானுமதியிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த பிரச்சனை குறித்து பேசிய மாதவன், “பேசிக் கொண்டிருந்தபோதே என்னையும், என் தாயையும் கிருபாகரன் தாக்கினார். போலீஸ்காரன் என்னை உன்னால் எதுவும் பண்ண முடியாது. உன்னைவிட என்னிடம் அதிக பணம் இருக்கிறது. உன்னை இங்கேயே வெட்டி புதைத்துவிடுவேன். காவலாக இருக்க வேண்டிய போலீஸே இப்படி செய்தால் எப்படி. எங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். மரக்கிளையை வெட்டியதற்காக மண்வெட்டி எடுத்து போலீசார் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.