காஞ்சிபுரத்தில் முதுநிலை காவலர் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் முதுநிலை காவலர் மோகன்ராஜ். இவர் நேற்று பணிமுடிந்த பிறகு, தனது இருசக்கர வாகனத்தில் இல்லத்திற்கு சென்றுள்ளார். திருமங்களம்-கண்டிகை சாலையில் அவர் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் மோகன்ராஜ் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த மோகனுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் காவல்துறையினர், மோகன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுனர்களின் உதவியுடன் குற்றவாளியின் தடயங்களையும் சேகரித்தனர். பின்னர் காஞ்சிபுரம் டிஐஜி தேன்மோழி மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் தலைமையில், மூன்று துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஏழு காவல் ஆய்வாளர்கள் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.