சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மது விருந்து நடத்திய நடிகை மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு, சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் உள்ள பண்ணை வீட்டில், மது விருந்து நடப்பதாகக் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டை காவல் துறையினர் சுற்றி வளைத்த போது, சினிமா நடிகை கவிதாஸ்ரீ என்பவர், ஸ்ரீஜித்குமார் என்பவருடன் இணைந்து விருந்துக்கு ஏற்பாடு செய்தது தெரியவந்தது. நடனமாடுவதற்காக 10-க்கும் மேற்பட்ட பெண்களை அழைத்துவந்து, ஆண்களிடம் நுழைவுக் கட்டணமாக தலா 5 ஆயிரம் ரூபாயை கவிதாஸ்ரீ வசூலித்தது தெரிய வந்தது.
அங்கிருந்த ஸ்ரீஜித்குமார் உள்ளிட்ட 16 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து, சட்டத்திற்கு புறம்பாக பண்ணை வீட்டில் மது விருந்து நடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், நிகழ்விடம் வந்த கானத்தூர் கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி, பண்ணை வீட்டைப் பூட்டி சீல் வைத்தார்.