குற்றம்

சென்னை: QR Code மீது ஸ்டிக்கர் ஓட்டி நூதன முறையில் பண மோசடி

சென்னை: QR Code மீது ஸ்டிக்கர் ஓட்டி நூதன முறையில் பண மோசடி

JustinDurai
சென்னையில் மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் நூதன மோசடியில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. நடந்தது என்ன?
கொரோனா பாதிப்பு உருவாக்கிய பல்வேறு மாற்றங்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையும் ஒன்று. கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு நேரடியாகவோ, ஏடிஎம் கார்டுகள் மூலமாக முன்பெல்லாம் பணம் செலுத்தி வந்த மக்களில் பலர், கூகுள் பே, ஃபோன் பே என டிஜிட்டல் முறைக்கு மாறினர். அதனை வைத்து கொஞ்சம் புதிதாக சிந்தித்து மோசடியில் ஈடுபட்ட இருவர் காவல்துறையின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த துரை என்பவர் மூலமாக வெளிவந்திருக்கிறது இந்த மோசடி. பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கந்தன்சாவடியில் டீக்கடை நடத்திவரும் துரை, வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்க டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையான QR Code-ஐ பயன்படுத்தி வருகிறார்.
வங்கிக் கணக்கில் வரவு செலவு விவரங்களைப் பார்த்தபோது, அதில் மாத வருமானம் வெகுவாக குறைந்திருப்பதை அறிந்து டீக்கடை உரிமையாளர் துரை குழப்பமடைந்தார். இதுகுறித்து ஆராய்ந்த போதுதான் அவர் வைத்திருக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்தால், வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணம் வேறொரு வங்கிக் கணக்குக்கு செல்வது தெரியவந்தது.
அதிர்ந்துபோன துரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருவர் நின்றிருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த ராபர்ட் மற்றும் வல்லரசு என்பதை கண்டறிந்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்து விசாரித்தனர். அதில் ஃபோன் பே நிறுவனத்தில் பணியாற்றிய வல்லரசு, QR Code மூலம் மோசடி செய்யும் புதிய திட்டத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
அதாவது டீக்கடை உரிமையாளர் துரையின் கடையின் QR Code மீது, அவர்கள் வேறொரு QR Code ஸ்டிக்கரை அடையாளம் தெரியாதபடி ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் QR Code-ஐ ஸ்கேன் செய்தால், அந்த பணம் மோசடி நபர்களின் வங்கிக் கணக்குக்கு சென்றிருக்கிறது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், இவர்கள் வேறு எந்த இடங்களில் எல்லாம் இதே பாணியில் மோசடி செய்திருக்கிறார்கள் என விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க, பணம் வசூலிக்கப் பயன்படும் QR Code-ஐ கடைக்கு வெளியில் ஒட்ட வேண்டாமென வணிகர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது காவல்துறை.
- சாந்தகுமார்