குற்றம்

தவறாகிப்போன திரைப்படங்கள் மீதான 'இன்ஸ்பிரேஷன்' - செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது

JustinDurai

திரைப்படங்களை பார்த்து தங்கச் சங்கலி பறிப்பில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிசிடிவி காட்சியால் சிக்கினார்.

சென்னை பெசன்ட் நகர் 22 வது தெருவை சேர்ந்தவர் கிருத்திகா (38). இவர் கடந்த 25ஆம் தேதி பெசன்ட் நகர் 22வது குறுக்கு தெரு பகுதியில் கடைக்கு நடந்து சென்றபோது, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கிருத்திகாவிடமிருந்து 4.5 சவரன் தங்க சங்கலியை பறித்துவிட்டு தப்பி சென்றார்.

இது குறித்து கிருத்திகா சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். வழக்குபதிவு செய்து சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு போலீசார் பார்த்துள்ளனர். ஆனால் சிக்கவில்லை.

இதனையடுத்து போலீசார் சிசிடிவியில் பதிவான அந்த நபரின் இருசக்கர வாகன பதிவு எண்ணை வைத்து தேடி உள்ளனர். அந்த இருசக்கர வாகனம் சென்ற பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வந்தனர். சுமார் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை பெருங்குடி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியை பூர்விகமாக கொண்டு சென்னை பெருங்குடி கந்தன்சாவடி காந்தி தெருவில் வாடகை வீட்டில் வசித்து வரக்கூடிய திவாகர் (26) என்பது தெரியவந்தது. பட்டதாரியான இவர் நெய்வேலியில் தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் வேலை பறிபோனதால், குடும்ப கஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனால் சென்னைக்கு வேலை தேடி வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார். சென்னையில் வேலை தேடியும் கிடைக்காததால் மன விரக்தியில் செயின் பறிப்பில் ஈடுபட திட்டமிட்டதாக திவாகர் தெரிவித்துள்ளார். செயின் பறிப்பில் ஈடுபட  பல திரைப்படங்களை பார்த்து கற்றுக்கொண்டு முதன்முறையாக பெசன்ட் நகர் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் நீண்ட நாட்களாகியும் போலீசார் தன்னை நெருங்காததால் மீண்டும் செயின் பறிப்பில் ஈடுட திட்டமிருந்த போது போலீசார் தன்னை கைது செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து திவாகர் வீட்டின் மொட்டை மாடியில் டேங்க் பக்கத்தில் மறைத்து வைத்திருந்த 4.5 சவரன் செயின் மற்றும் பறிப்பிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் திவாகரிடமிருந்து பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட திவாகர் மீது செயின் பறிப்பு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க: இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: சிசிடிவி மூலம் சிக்கிய இருவர் கைது