குற்றம்

`வெற்றிக்கொடிக்கட்டு’ பாணியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ரூ.70 லட்சத்துக்கும் மேல் மோசடி!

நிவேதா ஜெகராஜா

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தரகர்கள் கொடுக்கும் விமான டிக்கெட் மற்றும் விசாக்களை ஆராய்ந்த பின்பு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என செனௌனை காவல் ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம். மன்னார்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கடந்த 2018-ம் வருடம் கொடுத்த புகாரில் அரசின் எவ்வித அனுமிதியின்றி Brightway International Tours and Travel என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் சதீஷ்குமார் சொன்ன விவரம் உண்மையென தெரியவரவே, மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்புபிரிவு சார்பில் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த போரூரை சேர்ந்த முகமது ரபி (52) என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில், அரசின் அனுமதி பெறாமல் அலுவலகம் நடத்தி வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி சுமார் 40 நபர்களிடம் ரூ.70 லட்சத்திற்கு மேல் பணத்தை பெற்றுக்கொண்டு போலியான நியமன கடிதத்தை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து முகமது ரபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிகழ்வை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “பொதுமக்கள் யாரும் இதுபோன்ற ஏமாற்றும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்” என்று எச்சரித்தார். மேலும், “சுற்றுலா விசாவில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வது சட்டத்திற்கு புறம்பானது. வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் புறப்படுவதற்கு முன்பு குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் சந்தேகங்களை சரிசெய்து கொள்ளவும். தரகர்கள் கடைசி நேரத்தில் விமான நிலையத்தில் வைத்து தரும் விசாக்களை நம்பி வெளிநாடுகளில் வேலைக்கு செல்லவேண்டாம். பயணத்திற்கு முன்பே விசாவினைப் பெற்று சம்மந்தப்பட்ட குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகி நம்பகத்தன்மையானதா என்று சரிபார்த்துக் கொள்ளவும்.

பதிவுபெறாத முகவர்கள் வழங்கும் விமானடிக்கெட், விசா ஆகியவைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக பெறப்படுபவை என்பதால் கடைசி நேரத்தில் அவை ரத்து செய்யப்பட்டு, அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டு பொதுமக்களை ஏமாற்றிவிடலாம். ஆதலால் அவர்கள் வழங்கும் விமான டிக்கெட், விசா ஆகியவைகள் உண்மைதானா என்று விசாரணை செய்யாமல் எக்காரணத்தைக் கொண்டும் பாஸ்போர்ட்டையோ அவர்களிடம் கொடுக்க வேண்டாம்” என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

- செய்தியாளர்: சுப்பிரமணியன்