குற்றம்

கருவாடு சத்யா வாக்குமூலத்தால் திடுக்கிட்ட போலீஸ்..! கஞ்சா வழக்கில் காவலருக்கு தொடர்பா?

கருவாடு சத்யா வாக்குமூலத்தால் திடுக்கிட்ட போலீஸ்..! கஞ்சா வழக்கில் காவலருக்கு தொடர்பா?

Rasus

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் காரில் கஞ்சா கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் பட்டினப்பாக்கம் தலைமைக் காவ‌லருக்கு தொடர்பு இருப்பதாக கைதான நபர் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மந்தைவெளியில் தனியார் ஒட்டுநர் பயிற்சிப் பள்ளி நடத்தி வருபவர் ஜெயவீரபாண்டி மாதவ். ஏப்ரல் 17-ஆம் தேதி இவரது பயிற்சிப் பள்ளிக்குச் சொந்தமான காரில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தனது காரில் கஞ்சா கைப்பற்றப்பட்டதற்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என காவல்துறையினரிடம் விளக்கம் அளித்துள்ளார் ஜெயவீரபாண்டி. சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில்,‌‌‌ அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஜெயவீரபாண்டியனின் காரில் கஞ்சா பையை வைத்துவிட்டு‌ச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. சிசிடிவி பதிவில் இருந்தவர் யார் என விசாரித்தபோது, அவர் கண்ணகி நகரைச் சேர்ந்த கருவாடு சத்யா என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி கைது செய்யப்பட்ட கருவாடு சத்யா அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மந்தைவெளி காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ள முத்துகிருஷ்ணன் தான், தம்மிடம் கஞ்சாவை கொடுத்து ஜெயவீரபாண்டியனின் காரில் வைக்கச் சொன்னதாக ‌சத்யா‌ தெரிவித்துள்ளார். மந்தைவெளி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அருண்பாண்டியனுக்கும்,‌ ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் ஜெயவீ‌ரபாண்டியனுக்கும் இடையே பிரச்னை இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜெயவீரபாண்டியை பழிவாங்குவதற்கு உதவி செய்யும் நோக்கிலே தலைமைக் காவலர் முத்துகிருஷ்ணன், தன்னை இச்செயலைச் செய்யச் சொல்லி பணித்ததாகவும் சத்தியா வாக்குமூலத்தில் கூறியதாக‌ அபிராமபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.‌ இதுகுறித்து முத்து கிருஷ்ணனிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில்,‌ தம் மீதான குற்றச்சாட்டை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுகுறித்த விவரங்களைக் கேட்டறிய மந்தைவெளி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அருண்பாண்டியனை தொடர்புகொண்டபோது அவர் விடுப்பில் இருப்பது தெரியவந்தது. அடுத்தகட்டமாக அருண்பாண்டியனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கும் காவல்துறையினர், இருவருக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்த தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.