சென்னையில் வீடு புகுந்து நகைகளை திருடிய பட்டதாரி இளைஞர் அறிவழகன் மீது பத்து குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை கிண்டியில் தங்கி சைதாப்பேட்டை, அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதியில் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவங்கள் தொடர்பான விசாரணையின்போது அறிவழகன் நேற்று பிடிபட்டார். இவரிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவரிடம் நடத்திய விசாரணையின்போது, இரவில் தனியாக இருக்கும் பெண்களை வீடு புகுந்து கத்தி முனையில் மிரட்டி கொள்ளையடித்ததோடு பாலியல் வன்கொடுமை செய்ததாக அறிவழகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால் அதுபற்றி புகார்கள் வராத நிலையில், தற்போது அறிவழகன் மீது பத்து குற்ற வழக்குகள் மற்றும் ஒரு கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட அறிவழகன் பின்னர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவரை ஒருவார காலம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.