திண்டுக்கல் அருகே மதுபோதையில் தகராறு செய்த காவலரை பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினர்.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் பாண்டியராஜன். இவர் காமாட்சிபுரம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது ஒருவர் மீது மோதியதாக தெரிகிறது. அப்போது காவலர் பாண்டியராஜன் மது அருந்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், காவலருக்கும், நடந்து சென்றவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து போதையில் இருந்த காவலர் பாண்டியராஜன் அங்கிருந்த மக்களை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனையடுத்து பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சக காவலர்கள் பாண்டியராஜனை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால் குடி போதையில் இருந்த பாண்டியராஜன் தொடர்ந்து பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பாண்டியராஜன் திடீரென பொதுமக்களை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். பொதுமக்களை சமாதானம் செய்த சக காவலர்கள் பாண்டியராஜனை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.