குற்றம்

டிரான்ஸ் கிச்சன் உரிமையாளர் திருநங்கை சங்கீதா கொலைவழக்கில் குற்றவாளி கைது

டிரான்ஸ் கிச்சன் உரிமையாளர் திருநங்கை சங்கீதா கொலைவழக்கில் குற்றவாளி கைது

Sinekadhara

கோவையில் திருநங்கை சங்கீதா கொலை வழக்கில் ராஜேஷ் என்ற இளைஞர் கைது செய்யபட்டுள்ளார். தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் காவல்நிலையத்தில் புகார் செய்து விடுவேன் என கூறியதைக்கேட்டு ஆத்திரமுற்ற இளைஞர் திருநங்கை சங்கீதாவை கொலை செய்தததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை சாயிபாபா காலனி பகுதியில் வசித்து வந்தவர் திருநங்கை சங்கீதா. இவர் கடந்த புதன்கிழமை தனது வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நாகப்பட்டினத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ராஜேஷ் என்பவரை சாயிபாபா காலனி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், நாகபட்டினத்தை சேர்ந்த ராஜேஷ் ஊடக செய்திகளின் வாயிலாக சங்கீதாவின் டிரான்ஸ் கிச்சன் குறித்து அறிந்துகொண்டு வேலை தருமாறு கேட்டிருக்கிறார். வேலைக்கு சேர்ந்த ராஜேஷ், சங்கீதாவுடன் அவரது வீட்டிலேயே தங்கியிருக்கிறான்.

இந்நிலையில் சங்கீதாவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட ராஜேஷ் முயன்றிருக்கிறார். இதனால் கோபமடைந்த சங்கீதா காவல்நிலையத்தில் புகார் அளித்துவிடுவேன் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற ராஜேஷ் சங்கீதாவை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். கொலைநடந்த நாளன்று, கொலை செய்வதற்கு முன்னர் மதியமே தான் ஊருக்கு கிளம்ப இருப்பதாக சங்கீதாவிடம் கூறிய ராஜேஷ் தண்ணீர் டிரம்பை வீட்டின் பின்பகுதியில் எடுத்து வைத்திருக்கிறார். சங்கீதா கேள்வி எழுப்பவே அப்புறம் சொல்றேன் என கூறிவிட்டு ஊருக்கு கிளம்பியிருக்கிறார்.

ஆனால் மீண்டும் மாலை சங்கீதா வீட்டுக்கு வந்த ராஜேஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சங்கீதாவை தாக்கி கொலை செய்ததுடன் உடலை தண்ணீர் டிரம்பில் போட்டுவிட்டு சென்றிருக்கிறார். இந்நிலையில் புதன்கிழமை காலை துர்நாற்றம் வரவே அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். பின்னர்தான் இக்கொலை சம்பவம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. ராஜேஷ் வாக்குமூலத்தின்படி ராஜேஷை கைதுசெய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.