குற்றம்

பெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளியின் கை எலும்பு முறிவு

பெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளியின் கை எலும்பு முறிவு

webteam

சிதம்பரத்தில் பணத்திற்காக பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய வழக்கில் கைது செய்யபட்ட முக்கிய குற்றவாளி கழிவறையில் வழுக்கி விழுந்து கை எலும்பு முறிந்தது.

சிதம்பரம் அருகேயுள்ள புதுச்சத்திரத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் இந்த பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். குறிப்பிட்ட தொகைக்கு பெட்ரோல் போட்டுவிட்டு இயல்பாக பணத்தை கொடுத்துள்ளனர்.

அருகில் இருந்த ஒரு சிலரும் அந்த இடத்தை விட்டுச் சென்றதை நோட்டமிட்ட மூன்று பேரும் ஊழியரிடம் இருந்த பணப்பையை பறிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் பணப்பையை விடாததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த நீண்ட அரிவாளால் பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டினர். பின்பு பணப்பையுடன் தப்பியோடினர்.

இந்தக் கொடூர தாக்குதலில் தலை, கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அங்கிருந்த சிசிடிவி காட்சி அடிப்படையில் கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய தேவா, மணிகண்டன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் வாகன சோதனையில் புதுச்சேரியைச்சேர்ந்த சுரேஷ் என்பவர் பிடிபட்டார். இவர் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கொள்ளையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஒருவர் கழிவறையில் வழுக்கி விழுந்து கை எலும்பு முறிந்தது.