குற்றம்

போலி சிபிஐ அதிகாரி அட்டையை வைத்து போலீஸையே ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி!

webteam

திருப்பூரில் சிபிஐ அதிகாரி என்று போலி அடையாள அட்டை வைத்து, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பறித்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் பவானி நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார் (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராசையா (27) என்பவரிடம் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்நிலையில் ராசையா தான் சிபிஐ போலீஸ் பிரிவில் பணியாற்றுவதாகவும் அதில் வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி விக்னேஷ் குமாரிடம் 20,000 ரூபாய் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதமாக அவரை வேலையில் ஈடுபடுத்துவது போல் ராசையா நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் விக்னேஷ் குமாருக்கு சந்தேகம் ஏற்பட திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த திருப்பூர் வடக்கு காவல்நிலைய போலீசார் ராசையாவை ரகசியமாக பின் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

இதையடுத்து அவரிடம் வேலைக்கு சேர்வது போல் பேச்சுக் கொடுத்து நடித்துள்ளனர். ராசையாவும் போலீசார் என்று தெரியாமல் இரண்டு நாட்களாக அவர்களுடன் பேசி வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக வேலைக்கு சேர்வதற்காக பணம் கொடுப்பதற்கு ராசையாவை ஓர் இடத்திற்கு வரவழைத்த தனிப்பிரிவு போலீசார், அங்கு வந்த ராசையாவை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், ராசையா பத்தாம் வகுப்பு படித்தவர் என்றும், சிபிஐயில் அதிகாரியாக பணியாற்றுவது போல் போலியாக அடையாள அட்டை தயார் செய்து ஏமாற்றியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ராசையாவை கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து வேறு யாரிடமாவது இதே போல் நடித்து பணம் பறித்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.