புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெரியாரின் சிலையை சேதப்படுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் கடந்த 2003-ம் ஆண்டு பெரியார் சிலையுடன் கூடிய படிப்பகம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பெரியார் சிலையின் தலைப்பகுதியை மர்மநபர்கள் யாரோ சேதப்படுத்தினர். சிலையின் தலைப்பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து திராவிடர் கழக மண்டல செயலாளர் ராவணன் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த ஆலங்குடி போலீசார் இச்சம்வம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் சிசிடிவி கேமரா காட்சியை வைத்து ஆராய்ந்த காவல்துறையினர், சிலையை சேதப்படுத்திய செந்தில்குமார் என்ற ஆயுதப்படை வீரரை கைது செய்தனர். விசாரணையில், மதுபோதையில் செந்தில்குமார் பெரியார் சிலையை சேதப்படுத்தியது தெரியவந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎஃப் வீரராக பணியாற்றி வரும் அவர் விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது இந்த செயலில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.