செய்தியாளர்: J.அருளானந்தம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள நேரு நகர் பகுதியில் கண்ணன் என்பவர் குடியிருந்து வருகிறார். இவர், நேற்று இரவு வெளியூரில் பெயிண்டிங் வேலைக்குச் சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது மூன்று இளைஞர்கள் அவரை வழிமறித்து அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு முதுகில் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த கண்ணன், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பெரியகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ், சிவகுமார் மற்றும் பங்களாபட்டியைச் சேர்ந்த வேல்முருகன் ஆகிய மூவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது இதேபோன்று வழிப்பறி மற்றும் கஞ்சா விற்பனை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.