கோவையில் சாலையோரத்திலிருந்த மனநல பாதிக்கப்பட்ட நபரொருவரை திருடன் என நினைத்து முதலில் அடித்த பொதுமக்கள், பிறகு அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அறிந்து அவருக்கு உணவு வழங்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
தொடர்புடைய செய்தி: மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை: முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு
கோவை பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி அருகே உள்ள தனியார் கல்லூரி முன்பு சாலையோரம் நின்று கொண்டிருந்த சுரேஷ்குமார் என்பவரின் காரை ஒரு வாலிபர் கம்பியை கொண்டு திறக்க முயன்றுள்ளார். இதனை கண்ட காரின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் அவர் காரை திருட முயன்றதாக எண்ணி, அவரை மடக்கி பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து போத்தனூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் வருவதற்குள் அந்த வாலிபர் கைகட்டுகளை அகற்ற முயற்சி செய்த நிலையில் காலையும் கட்டி வைத்துள்ளனர்.
பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் விசாரிக்கும் போது அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதைக்கேட்ட அவரை பிடித்த பொதுமக்கள் மன வேதனையுடன் அவருக்கு உணவு மற்றும் குடிநீர் ஆகியவை வாங்கி கொடுத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். அந்நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், காவல்துறையில் அவர்மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.