குற்றம்

கொலை வழக்கு: பண்ருட்டி நீதிமன்றத்தில் கடலூர் எம்.பி ரமேஷ் சரண்

Sinekadhara

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கடலூர் மாவட்டம் மேம்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த 19ஆம் தேதி டிஆர்வி ரமேஷ் என்பவருக்கு சொந்தமான முந்திரி ஆலையில் உயிரிழந்தார். இந்த வழக்கு சம்பந்தமாக கோவிந்தராஜின் உறவினர்கள் திமுக எம்.பி ரமேஷ் உள்ளிட்டோர் அடித்து கொலை செய்துவிட்டதாக புகார் தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் நாடாளுமன்ற உறுப்பினரான ரமேஷ் மீது சந்தேக வழக்கு பதிவு செய்தது. கடந்த 27ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ரமேஷ் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி போலீசார் ரமேஷ் உள்ளிட்ட 6பேர் மீது கொலைவழக்கு பதிவுசெய்தனர். அதில் ஏற்கெனவே ரமேஷின் முந்திரி ஆலை ஊழியர்களான நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்படுவாரா அல்லது சிபிசிஐடி அவரை கைது செய்யுமா என பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில் தற்போது டிஆர்வி ரமேஷ் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.