குற்றம்

நெல்லை கல்குவாரி விபத்து - தேடப்பட்டு வந்த உரிமையாளர் மங்களூரில் கைது

Sinekadhara

நெல்லை கல்குவாரி விபத்தில் தேடப்பட்டு வந்த உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் இருவரையும் மங்களூரில் தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகேயுள்ள அடைமிதிப்பான்குளம் குவாரியில் கடந்த 14ஆம் தேதி இரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆறு பேர் கல்குவாரிக்குள் சிக்கி கொண்ட நிலையில் மறுநாள் 15 ம் தேதி காலை ஹிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன், விஜய் ஆகிய இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். விபத்து நடந்த நேரத்தில் இருந்து கிட்டாச்சி வாகனத்தில் சிக்கியிருந்த செல்வம் என்ற ஆப்பரேட்டர் பல மணி நேரம் உயிருக்காக போராடிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை செல்வம் மீட்கப்பட்டார். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் 16ஆம் தேதி திங்கட்கிழமை தேசிய பேரிடர் மீட்புப்படையினர், இரவில் நீண்ட நேர தேடுதலுக்கு பின் லாரி கிளீனர் முருகனை சடலமாக மீட்டனர். இதனால் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. தொடர்ந்து 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை ஐந்தாவது நபரின் உடல், பாறை குவியலுக்குள் இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டது. அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டது. ஆனால் பாறைகளுக்கு இடையில் அவரது உடல் சிக்கி இருப்பதால், உடலை மீட்க முடியவில்லை.

கீழே கிடக்கும் பாறைகளை நகர்த்தும் போது, மேலே இருக்கும் பாறைகள் மெல்ல மெல்ல நகர்ந்து கீழே இறங்குவதால் ஐந்தாவது நபரை மீட்பதற்கு நள்ளிரவு 1 மணி வரை நடத்திய நீண்ட மீட்பு போராட்டம் வெற்றி பெறவில்லை. இரவில் பாறைகளை அகற்ற முயற்சித்த நிலையில் மீண்டும் சிறிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட தொடங்கியதன் காரணமாக 3ஆம் நாள் மீட்புப்பணிகள் நள்ளிரவில் கைவிடப்பட்டது. 

மண்ணியல் மற்றும் சுரங்கத் துறை வல்லுநர்கள் காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினருடன் ஆலோசனை செய்த நிலையில் பாறையில் துளையிட்டு வெடி மருந்துகளை வைத்து தகர்த்து உடலை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 20 ஜெலட்டின் குச்சிகள் கொண்டு வரப்பட்டது. மேலும் பாறையில் துளையிடும் இயந்திரம் மூலம் துளையிடப்பட்டு 10 ஜெலெட்டின் குச்சி வெடிமருந்துகள் செலுத்தப்பட்டது. மீட்பு பணிகளில் ஈடுபடும் நபர்கள் பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கி கொள்ள மதியம் 3.20 மணி அளவில் பாறை பெரும் சத்தத்துடன் தகர்க்கப்பட்டது.

17ஆம் தேதி காலையே உடல் அடையாளம் கண்ட நிலையில் 30 மணி நேரத்தை கடந்த பின்னர் 5 வது நபரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. 5 வதாக மீட்கப்பட்ட தொழிலாளர் காக்கைகுளம் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வகுமார் (வயது 30) எனத் தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கிய 6 பேரில், 5 பேர் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் ஒருவர் உடல் மீட்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில், தேடப்பட்டு வந்த கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் இருவரையும் மங்களூரில் தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.