குற்றம்

கந்துவட்டி கொடூரம்: பட்டப்பகலில் ஒருவர் குத்திக்கொலை

webteam

திருச்செங்கோட்டில் கந்துவட்டி விடுவதில் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி( வயது 50). இவர் இப்பகுதியில் தறிப்பட்டறை மற்றும் கந்துவட்டி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி காலை 9 மணியளவில் தனது இல்லத்தில் இருந்து வெப்படை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது செம்மக்கள் மேடு என்ற இடத்தில் இருவர் இவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியுள்ளார். வயிறு மற்றும் கைகளில் கத்தியால் குத்தியுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த குப்புசாமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அவரை  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த திருச்செங்கோடு புறநகர் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

குப்புசாமி கொலை செய்தது யார்.என்ன காரணத்திற்காக இந்தக்கொலை சம்பவம் நடைப்பெற்றது. பணம்கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில்போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அருளரசு மற்றும் திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது திருச்செங்கோடு மலை அடிவாரம் பகுதியில் தனபால் என்பவர் சந்தேகப்படும்படி சுற்றி உள்ளார். தனபாலை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். படுகொலை செய்யப்பட்ட குப்புசாமிக்கும் இவருக்கும் கந்து வட்டி விடுவதில் தொழில் போட்டி இருந்து வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக இவர்களுக்குள் சண்டையும் நடைப்பெற்றுள்ளது.

தொழில் போட்டியால் ஆத்திரத்தில் இருந்த தனபால் ஈரோட்டை சேர்ந்த தனது நண்பர் கமல்ராஜ் என்பவருடன் இந்தக்கொலையை செய்துள்ளார்.தேவனாங்குறிச்சி பகுதிக்கு குப்புசாமியை வரவழைத்து பட்டப்பகலில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இருவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

( தகவல்கள் : மனோஜ் கண்ணா - திருச்செங்கோடு செய்தியாளர் )