குற்றம்

ஏடிஎம்களில் ஸ்கிம்மர் பொருத்தி பணம் திருட்டு.. நைஜீரிய இளைஞர் சென்னையில் கைது..!

Rasus

புதுச்சேரியில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நைஜீரியா நாட்டை சேர்ந்த இளைஞரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி பாக்குமுடையான்பட்டு கிழக்கு கடற்கரைசாலை அருகே எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் உள்ளது. கடந்த 9-ஆம் தேதி இந்த ஏடிஎம் மையத்திற்குள் சென்ற ஒருவர் தனது ஏடிஎம் கார்டை செலுத்தி பணத்தை எடுக்க முயன்றுள்ளார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தின் பின் நம்பர் பதிவு செய்யும் மேல் பகுதியில் வித்யாசமான பொருள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து சோதனையிட்டபோது பின் நம்பர் பதிவு செய்யும் இடத்தின் மேல்பகுதியில் இருந்த ஸ்டிக்கர் அகற்றப்பட்டது. மேலும் அதில் ரகசிய கேமரா, பேட்டரி, மெமரி கார்டு உள்ளிட்டவை இருந்தது. இதனையடுத்து இந்த வழக்கு சைபர் க்ரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்ததில், ஒரு காரில் வந்த 2 பேர் ஏடிஎம் மையத்திற்குள் உள்ளே நுழைந்து ஸ்கிம்மர் கருவியை பொருத்தி சென்றது தெரியவந்தது. அந்த காரின் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், கார் சென்னை முகவரியில் பதிவு செய்யப்பட்டிருந்தது. உடனே சென்னை முகவரிக்கு போலீசார் சென்றனர்.

அந்த முகவரியில் இருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த ஜேஷர் செலஸ்டின் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மரைன் என்ஜினியரான அவர், ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி, அதன் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து செலஸ்டினை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து லேப்டாப், கார், போலி ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இரண்டு வெளிநாட்டினரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் இதுபோன்று வேறு எங்காவது திருட்டில் ஈடுபட்டுள்ளனரா? எனவும், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.