குற்றம்

`விவாகரத்தான பெண்களை குறிவைத்து காதலின் பேரில் பாலியல் துன்புறுத்தல்’- ஒருவர் கைது

நிவேதா ஜெகராஜா

திருமணம் செய்துகொள்வதாக கூறி தான் உட்பட பல பெண்களை காதலித்து ஏமாற்றி உடலுறவு கொண்டதுடன், பலவகையில் அவர்களுக்கு பாலியல் தொல்லைகளும் கொடுத்ததாக, சென்னையை சேர்ந்த ஒருவர் மீது பெண்ணொருவர் சமீபத்தில் புகார் கொடுத்திருந்தார். காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறை அந்நபரை தற்போது கைது செய்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது காதலன் தன்னைப்போல் பல பெண்களை காதலித்து ஏமாற்றி உடலுறவு கொண்டதாகவும், தனது ஆசைக்கு இணங்க வேண்டும் எனக்கூறி பல வழிகளில் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாகவும், தற்போது மீண்டும் வேறொரு பெண்ணை வரும் 16 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறி புகாரொன்று கொடுத்திருந்தார். அத்திருமணத்தை தடுத்து நிறுத்தி அந்த நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று தனது புகாரை அவர் அளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் திருமணமாகி 2016 ஆம் ஆண்டு விவாகரத்து ஆன பெண். விவாகரத்துக்குப்பின், விக்ரம் வேதகிரி என்பவரும் நானும் காதலித்தோம். அவர் சென்னை திருநின்றவூரில் வசித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகமான அவர், எனது வேலை சார்ந்த விஷயங்களைப் பேசத் தொடங்கினார். தொடர்ந்து பேசி பேசி, எனக்கு திருமணமாகி விவாகரத்து ஆனது உட்பட என் சொந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டார். பின் 2021 ஆம் ஆண்டு நேரில் சந்திக்கத் தொடங்கியதும் விக்ரம் என்னிடம் அவரின் காதலை வெளிப்படுத்தினார்.

அவரது காதலை முதலில் மறுத்த தான், நாளடைவில் அவரின் நடவடிக்கைகளை ரசிக்கத் தொடங்கி காதலை ஒப்புக்கொண்டேன். ஆனால் அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அவர், என்னை அவரின் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்துவைத்து, என்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி ரகசியமாக திருமணமும் செய்துகொண்டார். அதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி எனது வீட்டில் வந்து தங்கியிருந்தார். ஊரறிய விரைவில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னுடன் பலமுறை உடலுறவு வைத்துக்கொள்ளவும் செய்தார்.

திருமண ஆசைகாட்டி நிச்சயதார்த்தம் வரை முடிந்த பின்னரும், திருமணம் செய்துகொள்ளாமல் காலம் தாழ்த்தி தன்னுடன் உடலுறவில் மட்டுமே நாட்டம் காட்டி வந்த அவர், நாளடைவில் தனது பாலியல் இச்சைகளை என் மீது திணித்து பல வழிகளில் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நான் மறுத்தால் என்னை தாக்கவும் செய்தார். அதைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் தான் காவல்துறையை நாடியபோது விக்ரம் தன்னை மன்னித்து விடுமாறு கூறி என்னை புகார் அளிக்கவிடாமல் தடுத்துவிட்டார். ஆனால் தொடர்ந்து விக்ரம் தன்னை அவரது பாலியல் இச்சைகளுக்கு இணங்க வைத்ததை பொறுக்க முடியாமல் தட்டிக்கேட்டபோது, என்னிடம் சொல்லாமல் தலைமறைவாகி விட்டார். அப்படி செல்கையில், எனது லேப்டேப்-ஐ உடன் எடுத்துச் சென்றுவிட்டார்.

பின்னர் எனது சகோதரர் மூலம் பேசி லேப்டாப்-ஐ திரும்பக் கேட்டேன். அப்போது எங்களை மிரட்டிய விக்ரம் 20 ஆயிரம் பணத்தைப் பெற்றுக்கொண்டே லேப்டாப்-ஐ திருப்பிக் கொடுத்ததார். இந்தப் பணம் மட்டுமன்றி, காதலிக்கத் தொடங்கியது முதல் ரகசியமாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தது வரை என்னிடம் 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் பெற்று விக்ரம் செலவு செய்துள்ளார். விக்ரமின் உடைந்த செல்போன் ஒன்றை எனது வீட்டில் விட்டுச் சென்றிருந்தார். அதை சரிசெய்து பார்த்தபோது, ஆபாசப் புகைப்படங்களையும் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து அதை வீடியோ எடுத்து வைத்திருப்பதையும் கண்டேன். அதைக்கண்ட பிறகே அவரை பற்றிய உண்மைகளை அறிந்தேன். இதனால் அதிர்ச்சியடைந்தேன்.

மேலும், சொந்த உறவுகளைப் பற்றி அருவருக்கத்தக்க ஆபாசக் கதைகள், மீம்கள் என விக்ரம் தனது செல்போனில் அவரே தயார் செய்து எழுதி வைத்துள்ளதை தான் கண்ட பின்னரே அவரது சுயரூபமும் தெரிந்தது. என்னைப் போல் பல பெண்களை காதல் வலையில் விழவைத்து விக்ரம் ஏமாற்றியுள்ளார் என்பதும் எனக்கு தெரியவந்தது. மேலும், அவரிடம் திரும்பப் பெற்ற எனது லேப்டாப்பில் இருந்து அவரது மின்னஞ்சல் மூலம் பல பெண்களுடன் எடுத்துக்கொண்ட ஆபாசப் படங்களை தான் கண்டேன். குடும்ப சூழலில் சுணக்கம் ஏற்பட்டு மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களை குறிவைத்து விக்ரம் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்புகொண்டு ஆபாச சேட்கள் செய்துள்ளதும் தெரியவந்தது.

இந்நிலையில்தான், நாளை மறுநாள் வேறொரு பெண்ணுடன் விக்ரமுக்கு திருமணம் நடைபெறவுள்ளதை அறிந்தேன். அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அப்பெண்ணின் வாழ்க்கையை காவல்துறை காப்பாற்ற வேண்டும். விக்ரம் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுத்து அவரால் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும். ஏற்கனவே வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். உரிய நியாயம் கிடைக்காமலும், பாதிக்கப்பட்டோரின் பெயர் வெளியில் வந்து விடும் என்ற பயமுமே பெரும்பாலான் பெண்கள் புகார் அளிக்க முன்வராததற்கு காரணம். ஆனால் மற்றொரு பெண் விக்ரமால் பாதிக்கப்படாமல் இருக்கத்தான், நான் முன்வந்து புகாரளித்துள்ளேன். இம்முறை காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்” என்றார்.

இந்நிலையில் இந்த புகார் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து விக்ரம் மீது மகளிர் போலீசார் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 417- ஏமாற்றுதல், 420- மோசடி, 406- நம்பிக்கை மோசடி, 354(ஏ)- பாலியல் வன்கொடுமை, 354- வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல், 506(2)- கொலை மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விக்ரமை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- செய்தியாளர்: சுப்பிரமணியன்