குற்றம்

சேலம்: மாட்டுத் தீவன மூட்டைகள் மத்தியில் ஒன்றரை கோடி மதிப்புள்ள குட்கா, போதைப் பொருட்கள்

PT WEB

சேலம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஒன்றரை கோடி மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் அம்மாப்பேட்டை புறவழிச்சாலையில் காவல்துறையினர் வாகனத் தணிக்கை சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியில் நின்று கொண்டிருந்த லாரி மற்றும் சரக்கு ஆட்டோவை சோதனைக்கு உட்படுத்த முயன்றனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பியோடினர். இதனையடுத்து, லாரி மற்றும் சரக்கு ஆட்டோவில், மாட்டுத் தீவன மூட்டைகள் மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள குட்கா இருப்பது தெரியவந்தது.

இதே போன்று, அன்னதானப்பட்டியில் ரோந்துபணியில் ஈடுபட்ட காவல்துறையினர், கிடங்கு ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்த இரண்டு லாரிகளை சோதனையிட்டனர். அதிலும், மூட்டை மூட்டையாக 7 டன் எடையுள்ள குட்கா இருப்பது தெரியவந்தது. இருவேறு இடங்களில், சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 3 லாரிகள் மற்றும் சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.