ஓமலூரில் போலீசாரை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு வழக்குகளில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை போலீசார் வாகனத்தில் அழைத்து வந்து, ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் அழைத்துச் செல்வது வழக்கம். இந்தநிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி, குற்றவாளிகளை ஓமலூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து மீண்டும் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது ஓமலூர் சரபங்கா ஆற்றுப்பாலம் அருகே போலீஸ் வாகனம் சென்றபோது, வாகனத்தை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ரவுடி பன்னீர்செல்வம், போலீஸ் வாகனத்தை வழிமறித்து தடுத்து நிறுத்தியுள்ளார். தொடர்ந்து வாகனத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை பார்த்து ஆபாசமாக திட்டி, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ரவுடியை வாகனத்தில் ஏறவிடாமல் தடுத்து நிறுத்தி, நடந்த சம்பவம் குறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்n சல்வத்தை கைது செய்தனர். இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி மீண்டும் போலீசாரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், தொடர்ந்து ரவுடித்தனம் செய்வதாக வந்த புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் இன்று மீண்டும் பன்னீர் செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.