சென்னை அருகே கார் ஓட்டுனர் ஒருவரை சரமாரியாக கத்தியால் வெட்டி வழிப்பறி செய்யும்பொது, அவரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு வாகன ஓட்டிகள் சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் ஓலாவில் கார் ஒட்டி வருகிறார். கடந்த 22ம் தேதி நள்ளிரவு புழல் அடுத்த ரெட்டேரி ஜி.என்.டி. சாலையில் காரை நிறுத்திவிட்டு ஒய்வெடுத்து கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 5 பேர் ஸ்ரீதரிடம் செல்போன் பறிக்க முயன்றனர். செல்போனை கொடுக்க ஸ்ரீதர் மறுத்ததால், மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக அவர்கள் வெட்டினர். அதோடு, ஸ்ரீதர் வைத்திருந்த ரூ45 ஆயிரம் பணம் மற்றும் செல்போனையும் அவர்கள் பறித்துச் சென்றனர்.
இதனையடுத்து தகவலறிந்த வந்த புழல் போலீசார் ஒட்டுநர் ஸ்ரீதரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்களை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் நெடுஞ்சாலையில் உள்ள அடுத்தடுத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வியாசர்பாடியைச் சேர்ந்த ஒருவரை போலீசார் பிடித்த விசாரணை நடத்தியதில் பணம் பறித்த மற்ற நான்கு பேரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
போலீசார் விசாரணையில் அவர்கள் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பாலா, ராஜீவ், நாகராஜ் மற்றும் இரண்டு சிறார்கள் என்பது தெரியவந்தது. நெடுஞ்சாலையில் ஒருவரை 5 பேர் கத்தியால் வெட்டி பணத்தைப் பறித்துக் கொண்டிருக்கும் போது, அந்தச் சாலையில் வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பார்த்து கொண்டே சென்றுள்ளனர். ஒருவர் கூட காப்பாற்ற வரவில்லை என விசாரணை செய்த போலிசார் தெரிவிக்கின்றனர்.