குற்றம்

நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு: கோவில்பட்டியில் 108 கடைகளை அகற்றும் பணிகள் தொடக்கம்

kaleelrahman

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 108 கடைகளை நீதிமன்ற உத்தரவின்படி இன்று அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரின் மையப் பகுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்று 5வது தூண் என்ற அமைப்பு சார்பில் அதன் தலைவர் சங்கரலிங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து கடந்த 2010ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நீர்நிலை ஆக்கிரமிப்பு கடைகள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 28 கடைகள் அகற்றப்பட்டன. மீதி கடைகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருந்த காரணத்தினால் அகற்றுவது தாமதமானது. இதன் காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் வெளியே செல்ல முடியாமல் சாலைகளில் தேங்கியது மட்டுமின்றி, தினசரி சந்தைக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது.

இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மீதமுள்ள 108கடைகளை அகற்றும் பணிகள் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.

இதில் 13 ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக கடைகளை அகற்றும் பணியில் வருவாய்த்துறை, நகராட்சி. நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை மற்றும் மின்சாரத் துறை ஊழியர்கள்; ஈடுபட்டுள்ளனர். பிரச்னைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வஜ்ரா வாகனங்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் பணியை பார்வையிட்டு, பாதுகாப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். கோவில்பட்டி நகர மக்களின் நீண்டகால கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.