குற்றம்

சட்டவிரோதமாக 3 எண் லாட்டரி விற்பனை: கடும் நடவடிக்கையில் இறங்கிய போலீஸார்

Sinekadhara

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி விற்பனை சிதம்பரத்தில் அமோகமாக விற்பனையாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். இந்தச் சூழலில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மூன்று எண் லாட்டரி சீட்டுகள் சிதம்பரத்தின் கஞ்சித்தொட்டி பகுதியில் அமோகமாக விற்பனையாகி வருகிறது. தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பது சட்டவிரோதமானது என அறிவித்த போதிலும், எவ்வித அச்சமும் இன்றி சிலர் கடைகளில் வைத்து விற்று வரும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

மேலும், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் சிலரும் அந்த லாட்டரி சீட்டுகளை வாங்க அந்தக் கடைகளின் முன்பாக குவிந்து வருகின்றனர். இதுபற்றி கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கேட்டதற்கு உரிய விசாரணை நடத்தி சட்டவிரோத லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.