குற்றம்

“கே.பி பார்க் கட்டுமான ஊழல் நிறுவனம் மீது ஒரு வழக்கு கூட பதியப்படவில்லை”- அறப்போர் இயக்கம்

“கே.பி பார்க் கட்டுமான ஊழல் நிறுவனம் மீது ஒரு வழக்கு கூட பதியப்படவில்லை”- அறப்போர் இயக்கம்

webteam
“கே.பி பார்க் கட்டுமானத்தில் ஊழல் செய்தவர்கள் மீது இன்று வரை அரசு எந்தaவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிஎஸ்டி நிறுவனம் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை” என அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் கூறியுள்ளார். 
புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமானத்தின்போது நடந்துள்ள ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆதாரங்களுடன் அனுப்பியுள்ளது. மேலும் தரம் குறித்து ஐஐடியின் CUBE நிறுவனம் அளித்த முழு ஆய்வு அறிக்கையையும் அறப்போர் இயக்கம் வெளியிட்டது. அது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறப்போர் இயக்க அலுவலகத்தில் ஜெயராம் வெங்கடேசன் தலைமையில் நடந்தது.
அப்போது பேசிய ஜெயராம் வெங்கடேசன், "இன்று வரை கே பி பார்க் கட்டுமானத்தில் ஊழல் செய்தவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. பி எஸ் டி நிறுவனம் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறையிடம் CUBE நிறுவனத்தின் முழு ஆய்வு அறிக்கையுடன் புகார் அளித்துள்ளோம்.
2007-ல் கே பி பார்க் கட்டுமானத்திற்கான டெண்டர் விடப்பட்டது. பிஎஸ்டி நிறுவனம் மட்டுமே தகுதி பெற்றவராக அறிவிக்கப்பட்டு, ஒருவர் மட்டுமே விலை பட்டியலில் பங்கெடுக்கும் Single Bid Tender ஆக அவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. 32,000 சதுர மீட்டருக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 89 கோடி 92 லட்சம் ரூபாய் A,B,C,D ஆகிய 4 ப்ளாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அடிக்கு 800 ரூபாய் சந்தை மதிப்பை விட அதிகமாக பிஎஸ்டி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் 27 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
CUBE ஆய்வறிக்கையை பார்க்கும்போது 1:3 என்கிற அளவில் சிமெண்ட் மணல் விகிதம் இருக்க வேண்டிய 95% மாதிரிகளில் மணலின் அளவு மிக அதிகமாக உள்ளது. அதேபோல 1:5 விகிதத்தில் சிமெண்ட் மணல் விகிதம் இருக்க வேண்டிய இடங்களில் 89% மணலின் அளவு மிக அதிகமாக உள்ளது. மொத்தத்தில் 70% மாதிரிகள் பூச்சு வேலைகளை பொறுத்தவரை தரமில்லாமல் உள்ளது. அந்த கட்டடத்தின் ஸ்திரத்தன்மையும் நிறைய மாதிரிகளில் போதாமல் இருக்கிறது. முக்கியமாக ப்ளாக் பி-ன் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.
இரண்டாவது கட்டத்தில் கட்டப்பட்ட 1056 வீடுகள் தருண் கட்டுமான நிறுவனம் என்ற நிறுவனம் கட்டப்பட்டதாக சொல்கிறார்கள். அந்த டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது. தருண் கட்டுமான நிறுவனமும் நாமக்கலை சேர்ந்த நிறுவனம் தான். அந்த நிறுவனத்துக்கும் பி எஸ் டி க்கும் தொடர்பு உள்ளது. அது பற்றியும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்.
ஐஐடி ஆய்வறிக்கை வந்த பிறகும் ஏன் இன்னும் FIR பதியப்படவில்லை என்பதற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். கீழ்மட்ட அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது, அப்போது துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி அனைவர் மீதும் விசாரணை பாய வேண்டும். பி எஸ் டி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யாமல் இந்த விவகாரம் மூடி மறைக்கப்படுகிறது. அமைச்சர் தா மோ அன்பரசனுக்கும் பி எஸ் டி நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு என்பதை வெளிப்படையாக கேட்கிறோம். ஏன் வழக்கு பதியப்படாமல் உள்ளது? திமுக அரசு பி எஸ் டி நிறுவனத்தை காப்பாற்ற முயற்சிக்கிறது.
45 நாட்களுக்குள் கட்டடத்தை சரி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு பி எஸ் டி நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அது எப்படி முடியும்? முழு பூச்சு வேலையையும் அகற்றிவிட்டு தானே சரி செய்ய முடியும். தமிழக அரசின் இந்த உத்தரவு வெறும் கண்துடைப்பு வேலைதான். மக்களுக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு அந்த கட்டடம் முழுவதுமாக சரிசெய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.
- தாரணி பாலசுப்ரமணியம்