குற்றம்

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக இளம்பெண் புகார் - எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

JustinDurai

சேர்ந்து வாழ்ந்துவிட்டு திருமணம் செய்துகொள்ளாமல் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஒடிசா எம்.எல்.ஏ. ஒருவர் மீது இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் திர்டோல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிஜய் சங்கர் தாஸ். 30 வயதான இவர் ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து மே 17-ஆம் தேதி முன்பதிவு செய்து வைத்திருந்தாகவும், அதன்படி, அந்த பெண்ணிடம் ஜூன் 17ஆம் தேதி திருமணம் செய்துகொள்வதாக எம்.எல்.ஏ. பிஜய் சங்கர் தாஸ் கூறியதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் அந்த பெண் மணபெண் கோலத்தில் நேற்று முன்தினம் திருமண பதிவு அலுலகத்திற்கு தனது குடும்பத்துடன் வந்துள்ளார். ஆனால், பெண்ணை பதிவுத்திருமணம் செய்துகொள்ள எம்.எல்.ஏ  பிஜய் சங்கர் தாஸ் வரவில்லை. இதனால், சேர்ந்து வாழ்ந்துவிட்டு திருமணம் செய்துகொள்ளாமல் தன்னை ஏமாற்றிவிட்டதாக எம்.எல்.ஏ. பிஜய் சங்கர் தாஸ் மீது அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினர் தன்னை மிரட்டுவதாகவும் அந்த பெண் புகாரில் குறிப்பிடுள்ளார்.

இதையடுத்து எம்.எல்.ஏ. பிஜய் சங்கர் தாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இதுதொடர்பாக எம்.எல்.ஏ. பிஜய் சங்கர் தாஸ் கூறுகையில், ''பதிவுத்திருமணம் செய்துகொள்ள இன்னும் 60 நாட்கள் உள்ளன. திருமணத்தை நிறுத்த நான் முயற்சிக்கவில்லை. பதிவுத்திருமணம் தொடர்பாக மணப்பெண்ணோ அவரின் குடும்பத்தினரோ என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாம்: பிறந்து 38 நாட்களேயான குழந்தையை கொன்ற தாய்?! கைது செய்து விசாரணை