குற்றம்

’என் மூளையே என் எதிரி’: 5-வது மாடியில் இருந்து குதித்து செய்தி வாசிப்பாளர் திடீர் தற்கொலை!

’என் மூளையே என் எதிரி’: 5-வது மாடியில் இருந்து குதித்து செய்தி வாசிப்பாளர் திடீர் தற்கொலை!

webteam

ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து, செய்தி வாசிப்பாளர் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் மூசாப்பேட்டையில் உள்ள, ஐந்து மாடிகள் கொண்ட ஸ்ரீவிலா அபார்ட்மென்டில் வசித்து வந்தவர் ராதிகா ரெட்டி (36). தெலுங்கு சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய ராதிகா, நேற்று இரவு 10.45 மணி அளவில் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். தனது ஹேண்ட் பேக்கை வீட்டுக்குள் வைத்துவிட்டு யாரிடமும் பேசாமல் நேராக மொட்டை மாடிக்குச் சென்றார். திடீரென்று ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். 

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ரத்தவெள்ளத்தில் ராதிகா கிடப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு ராதிகாவை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராதிகாவின் ஹேண்ட்பேக்கில் இருந்த ஒரு பேப்பரை கைப்பற்றினர். அதில், ’மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்கிறேன். இதற்கு வேறு யாரும் காரணமல்ல, என் மூளையே எனக்கு எதிரி’ என்று எழுதப்பட்டிருந்தது.

சேனலில் ராதிகாவுடன் பணியாற்றியவர்கள் கூறும்போது, ‘நேற்றிரவு கடைசி புல்லட்டினை வாசிக்கும்போதுகூட அவரிடம் எந்த முகமாற்றமும் தெரியவில்லை. வழக்கம் போலவே சிரித்தபடி இருந்தார். ராதிகா கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கணவரை விவாகரத்து செய்தார். பின்னர் தங்கை மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார். அவருக்கு ஆட்டிசம் பாதித்த மகன் ஒருவன் இருக்கிறான். வீட்டின் கஷ்டங்களை அவர் சகப்பணியாளர்களிடம் என்றுமே சொன்னதில்லை. அவர் இப்படி தற்கொலை வரை செல்வார் என்று நினைக்கவில்லை’ என்றனர்.

போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.