தென்னாப்பிரிக்காவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கேப்டவுன் கிரிக்கெட் மைதானம் முக்கியமான ஒன்று. இங்கு புகழ்பெற்ற பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் நடந்துள்ளன. இங்கு நடந்த டெஸ்ட் போட்டியில்தான், பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக டேவிட் வார்னர், பேன்கிராஃப்ட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சிக்கினர். இதற்கு முன் இந்திய அணியும் இங்கு விளையாடி இருந்தது.
இந்த மைதானத்துக்குள் நேற்று இரவு கேட் ’ஏ’-வுக்கு வந்த பெண் ஒருவர், அருகில் ஏதும் சர்ச் இருக்கிறதா? என்று விசாரித்திருக்கிறார் செக்யூரிட்டியிடம். அவர் சொன்னார். அங்கிருந்து சென்ற அந்தப் பெண், சிறிது நேரத்திலேயே திரும்பி வந்தார். அவருடன் 15-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். சிலர் கைகளில் துப்பாக்கி. பின்னர் செக்யூரிட்டியை மிரட்டி சாவியைப் பறித்தனர். உள்ளே சென்ற அவர்கள் டிவி உள்ளிட்ட முக்கியமான பொருட்களை எல்லாம் சுருட்டிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த முக்கியமான சூட் ரூம்களின் கண்ணாடி களையும் அடித்து நொறுக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள சிசிடிவி கேமரா துணையுடன் போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். இதே மைதானத்தில் நடக்கும் மூன்றாவது கொள்ளைச் சம்பவம் இது.
கேப்டவுன் நகரம் கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.