குற்றம்

கொலை வழக்கில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கேரளாவில் கைது - நெல்லை காவல்துறை அதிரடி!

webteam

தென் மாவட்டங்களில் பிரபல ரவுடியான ராக்கெட் ராஜா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நெல்லை மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் சாமித்துரை (26) என்பவர், கடந்த 29.07.2022-அன்று முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் நடுநந்தன்குளத்தைச் சேர்ந்த விக்டர் (23), கோதைசேரியைச் சேர்ந்த முருகேசன் (23), தச்சநல்லூர், தாராபுரத்தை சேர்ந்த சஞ்ஜிவ்ராஜ்(25), ஶ்ரீராம்குமார் (21), ஆனந்த் (21), ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த ராஜசேகரன்(30), வடக்கு தாழையூத்தை சேர்ந்த பிரவீன் ராஜ் (30), கோவில்பட்டியை சேர்ந்த ராஜ்பாபு (30), தூத்துக்குடி, எட்டையபுரம் சேர்ந்த ஆனந்தராஜ் (24) மற்றும் ஜேக்கப் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய எதிரியான திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடியை சேர்ந்த ஆறுமுகப் பாண்டியன் என்ற பால விவேகானந்தன் என்ற ராக்கெட் ராஜா- வை நாங்குநேரி போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதூர்வேதி மற்றும் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் மாவட்ட தனிப்படை காவல்துறையினர் இணைந்து, தலைமறைவாக இருந்து வந்த ராக்கெட் ராஜாவை இன்று (07.10.2022) திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்தனர். இவர் மீது 5 கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் பனங்காட்டு படை என்கிற கட்சியை நிறுவி அதன் நிறுவனத் தலைவராக இருந்து வருகிறார். மேலும் இந்த கட்சி சார்பில் நாங்குநேரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் இவருடன் அரசியல் களத்தில் உடன் இருந்த ஹரி நாடார் போட்டியிட்டார். மேலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டு படை கட்சி சார்பில் ஹரி நாடார் போட்டியிட்டார். இதில் மற்ற கட்சிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஹெலிகாப்டர் மற்றும் பல்வேறு நூதன முறைகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.

மேலும் அந்த தேர்தலில் தமிழகத்திலேயே பனங்காட்டுப்படை கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி நாடார் மட்டும் தான் சுயேட்சையாகப் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர். மேலும் அவ்வப்போது அவர் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆணைகுடிக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நாங்குநேரி போலீசாரால் சாமிதுரை என்பவரின் கொலை வழக்கில் ராக்கெட் ராஜா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.