குற்றம்

கொலை வழக்கில் தொடர்புடைய நெல்லை குற்றவாளி: சென்னையில் துப்பாக்கி முனையில் கைது

kaleelrahman

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவனை அம்பத்தூர் அருகே துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து கிராமத்தில் கண்ணன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன் ஆஜராகினர். ஆனால், ஆஜரான மூவரும் பொய்யான குற்றவாளிகள் எனக் கூறி கோழி அருள்ராஜ் என்பவர், கொலை வழக்கில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி காவல் துறையினரை மிரட்டும் விதத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் செல்போன் சிக்னல் மூலம் தொடர் விசாரணை நடத்தி வந்த நெல்லை மாவட்ட தனிப்படை போலீசார் அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் அருள்ராஜ் தனது சித்தப்பா மகன் தினகரனின் வீட்டில் தஞ்சம் அடைந்து இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருநெல்வேலியில் இருந்து அம்பத்தூர் விரைந்தனர்.

இதையடுத்து உதவி ஆணையர் உதவியுடன் சென்னை போலீஸ் குழு மற்றும் திருநெல்வேலி போலீஸ் குழுவினர், கோழி அருள்ராஜ் தங்கியிருந்த வீட்டை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததாக அவரது சித்தப்பா மகன் தினகரனையும் கைது செய்து அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அவரை எப்போது நெல்லைக்கு அழைத்துச் செல்லலாம் என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர் .சென்னையில் பிரபல ரவுடி ஒருவனை துப்பாக்கி முனையில் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.