குற்றம்

நெல்லை: மது அருந்த வீட்டிற்கு அழைத்து இளைஞர் கொலை.. கொலையாளிகள் தப்பியோட்டம்...!

நெல்லை: மது அருந்த வீட்டிற்கு அழைத்து இளைஞர் கொலை.. கொலையாளிகள் தப்பியோட்டம்...!

kaleelrahman

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே மது அருந்த வீட்டிற்கு வரச்சொல்லி இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள அடங்கார் குளத்தைச் சேர்ந்தவர் சுகுந்தன். இவர் சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். 25 வயதான இவருக்கு மனைவி மற்றும் ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.


கொரோனா தொற்று காரணமாக போடப்பட்ட முழு அடைப்பினால் சென்னையிலிருந்து குடும்பத்துடன் தனது சொந்த ஊரான அடங்கார் குளத்திற்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு இவரது நண்பரான மேல சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர் சுகுந்தனை மது அருந்த வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனை நம்பி சுகுந்தனும் அவரது நண்பர் வசந்த்தும் முருகனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சுகுந்தன் மட்டும் முருகனின் வீட்டிற்குள் சென்றுள்ளார். அவரது நண்பர் வசந்த் வெளியே இருந்திருக்கிறார்.


இந்த நிலையில் வீட்டுக்குள் திடீரென சுகுந்தனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் வசந்த் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார். அப்போது அவரையும் தாக்க முயன்றுள்னர் முருகனும் அவரது நண்பரும். அவர்களிடமிருந்து தப்பிய வசந்த் அடங்கார் குளம் வந்து சுகுந்தன் தாக்கப்பட்டது குறித்து கூறியுள்ளார்.

உடனே அங்கிருந்து சுகுந்தனின் உறவினர்கள் முருகனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அதற்கு முன்பு வீட்டின் உள்ளே வைத்து சுகுந்தனை, முருகனும் அவரது நண்பரும் அரிவாளால் வெட்டியும், கம்பால் அடித்தும் காயப்படுத்திய பின்பு, சுகுந்தனை வீட்டுவாசல் முன்பு உள்ள திண்ணையில் கிடத்தி கிரைண்டரில் உள்ள மாவாட்டும் கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்துவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.


இதனை அடுத்து சுகுந்தனின் உறவினர்கள் கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடங்குளம் போலீசார், படுகொலை செய்யப்பட்ட சுகுந்தனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மணிவண்ணன், இறந்துபோன சுகுந்தனின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.


இதனைத்தொடர்ந்து கொலையாளி முருகன் மற்றும் அவரது கூட்டாளியை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தபட்ட அரிவாள் மற்றும் கல், கட்டைகளை போலீசார் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் முன்பகை அல்லது குடிபோதையில் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.