குற்றம்

சிறுமி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மருத்துவமனையில் அனுமதி!

webteam

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். உடனே இது தொடர்பாக அவரது பெற்றோர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் சிறுமி மற்றும் அவரது காதலனை பிடித்தனர்.

சிறுமியை அழைத்துச் சென்ற காதலன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மீட்கப்பட்ட சிறுமியானவள் 18 வயதிற்கு உட்பட்டவர் என்பதால் அவரை காவலர்கள் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளிடம் ஆஜர்படுத்தினர். அங்கு அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறுமி, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் உட்பட சிலர் தனக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாகவும், இந்தத் தொல்லைகளை நான் கடந்த இரண்டு வருடங்களாக அனுபவித்து வருவதாகவும், இவையனைத்திற்கும் தனது தாய் உடைந்தையாக இருந்ததாகவும் கூறினார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் இந்தத் தகவலை மாவட்ட குழந்தைகள் நலஅலுவலருக்கு தெரிவித்தனர். இதனையடுத்து அவரது தரப்பில் இருந்து இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் நாஞ்சில் முருகேசன் உட்பட 5 பேர் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய், குளத்தூரை சேர்ந்த பாலு, கோட்டார் கம்பளத்தை சேர்ந்த அசோக்குமார், கார்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

நாஞ்சில் முருகேசனை தேடிக்கொண்டிருந்தபோது அவர் தோட்டத்து பங்களாவில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், நாஞ்சில் முருகேசனை சிறையில் அடைக்க மருத்துவ பரிசோதனை நடத்தியதில், அவருக்கு அதிக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிற்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.