குற்றம்

நாமக்கல்: தாயை கட்டிப்போட்டு சிறுமி கடத்தல்; 50 லட்சம் கேட்டு மிரட்டிய தம்பதி கைது

நாமக்கல்: தாயை கட்டிப்போட்டு சிறுமி கடத்தல்; 50 லட்சம் கேட்டு மிரட்டிய தம்பதி கைது

kaleelrahman

நாமக்கல் அருகே 50 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட 11 வயது சிறுமியை மீட்ட போலீசார், அதே ஊரைச் சேர்ந்த தம்பதியரை கைது செய்துள்ளனர்.

நாமக்கல் அடுத்த காளிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் சரவணன்- கவுசல்யா தம்பதியினர். இவர்களது 11 வயது மகள் நேற்று அதிகாலை வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து அங்கு வந்த இருவர் அவரது தாய் மற்றும் அண்ணனை கட்டிப் போட்டு விட்டு சிறுமியை கடத்திச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து கடத்தல்காரர்கள் 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நிலையில், சிறுமியை மீட்க 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் அலங்காநத்தம் பிரிவு அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படியாக சிறுமியுடன் சென்ற தம்பதியரை அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் விசாரித்தனர்.

அப்போது சிறுமியை கடத்திச் சென்றவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியை மீட்டு இருவரிடமும் விசாரணை செய்ததில் அதே ஊரைச் சேர்ந்த கணவன் மணிகண்டன், மனைவி பொன்னுமணி ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.