குற்றம்

`3 மாதங்களில் 12 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!’- நாமக்கல் ஆட்சியர் தகவல்

webteam

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 12 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே நடைபெற்ற 20 குழந்தை திருமணங்களை செய்து வைத்த அனைவரின் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

குழந்தை திருமணங்களை தடுக்க பள்ளி ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசும்போது, “நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் 1098 இலவச தொலைபேசி எண்ணிற்கு வரப்பெற்ற புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, இதுவரை 12 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் நடைபெற்ற 20 குழந்தை திருமணங்களை ஏற்பாடு செய்த பெற்றோர்கள் உள்ளிட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் தங்கள் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும்” என அறிவுறுத்தினார்.

மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றமான ‘குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006-ன் படி 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கோ, 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ ‘திருமணம் செய்வது குற்றமாகும், இதை மீறுவோர் மீது குழந்தைத் திருமணத்தடைச் சட்டம் 2 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் தங்கள் பகுதியில் குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் உடனடியாக சைல்டு லைன், இலவச தொலைபேசி எண்:1098, பெண்களுக்கான இலவச தொலைபேசி எண் 181 -க்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார். குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தும் பணிகளில் கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் இணைந்து பணியாற்றி தங்கள் பகுதியில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.