குற்றம்

"என்னை கொன்றுவிடுவார் என்ற அச்சத்தில்”.. சாராய வியாபாரி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

webteam

நாகை அருகே சாராய வியாபாரி கொலை வழக்கில் திடீர் திருப்பம் அவரது மனைவியை கொன்றது போல் தங்களையும் கொன்று விடுவார் என்ற அச்சத்தில் கொலை நடந்தது விசாரணையில் அம்பலமானது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கடம்பங்குடி அஹ்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேல். கடந்த ஜூன் மாதம் இவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் தன்னுடைய மனைவியை அடித்துக் கொலை செய்தார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் சிங்காரவேல் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சிங்காரவேல் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதையடுத்து சிங்காரவேலு சிறையில் இருந்த போது உறவினர்கள் யாரும் பார்க்க வரவில்லை என்றும் ஜாமீனில் எடுக்கவில்லை என்றும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அவரது அண்ணன் மகன் வினோத் தான் காரணம் என்றும் தன் மனைவியை கொன்றது போல் உங்களையும் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை சிங்காரவேல் ஓர்க்குடி சிற்றாற்று பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிங்காரவேலின் அண்ணன் மகன் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் கருணாகரன், ரவீந்திரன், வினோகரன், மனோஜ், தாமோதரன் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மனைவியை கொன்றது போல் உங்களையும் கொன்று விடுவேன் என்று மிரட்டியதால் நண்பர்களோடு சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட வினோத் உள்ளிட்ட ஆறு பேரையும் கீவளூர் காவல் நிலைய போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.